வணக்கம்! இதயவீணையின்
செய்திகள்!! 03.09.2009
செய்தி ஆசிரியர் :- ஷோபா
வாசித்தளிப்பவர் :- அனுஷா
முதலில் தலைப்புச் செய்திகள்!!!
கலை
இலக்கியம் சமூக முன்னேற்றம் தமிழ்மொழி
வளர்ச்சி என பல்துறைகளும் சார்ந்த பன்முகச்
சிந்தனைகள் செழித்து வளர வேண்டும் என
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தெரிவித்துள்ளார்.
வவுனியா நலன்புரி
நிலையங்களில் தங்கியிருந்த 550 முதியவர்கள்
அகில இலங்கை இந்து மாமன்றத்தினாலும்
கோவில்குளம் கோவில் நிர்வாக சபையினராலும்
பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
ஆங்கில
மொழிப் பயிற்சிக்கான மத்திய நிலையம்
ஒன்றை நிறுவுவதற்கான உடன்படிக்கை ஒன்றில்
இலங்கையும் இந்தியாவும் கைச்சாத்திடவுள்ளன.
தமிழ்பேசும்
மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்கு
நடைமுறைச்சாத்தியமான தீர்வு காண்பதற்கு
அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு
விடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தெரிவித்துள்ளார்.
மஹிந்த சிந்தனையின்
அடிப்படையில் அனைவருக்கும் மின்சாரம்
என்னும் செயற்திட்டத்தை தொடர்ந்தும்
முன்னெடுக்கவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி
அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எமது அரசியல் இலக்கு நோக்கிய பயணத்தில்
இது போன்ற கலை இலக்கிய வரலாறுகளின் தேடல்
முயற்சிகளையும் முன்னெடுத்துச் செல்லவே
நாம் விரும்புகின்ற போதிலும் கடந்த
சில தசாப்தங்களாக அரசியல்
விவாதங்களுக்குள்ளும் அதற்கான தேடல்களுக்குள்ளும்
எமது இலக்கிய முயற்சிகள் யாவும் முடங்கிப்
போயிருப்பதாகவும் அரசியல் வழிமுறைகளுக்குள்
மட்டும் நாம் முடங்கியிருக்காமல் கலை
இலக்கிய ஆன்மீக மற்றும் தமிழ்மொழியின்
வளர்ச்சி குறித்த முயற்சிகளின்
பாதையிலும் நாம் பயணிக்க வேண்டியது
எமது தேசத்தின் கட்டாய கடமையாகும் என
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தெரிவித்துள்ளார்.
விஜய நகரப் பேரரசும் கலாச்சார மறுமலர்ச்சியும்
என்னும் தொனிப்பொருளில் இன்று மாலை
கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில்
இடம்பெற்ற ஆய்வரங்கின் ஆரம்ப வைபவத்தில்
கலந்து கொண்டு உரை நிகழ்த்திய அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா எமது மண்ணில் ஒரு
யுத்தம் நடந்து கொண்டிருந்த சூழலுக்குள்ளும்
நீங்கள் இது போன்ற இலக்கிய முயற்சிகளில்
இயன்றவரையில் ஈடுபட்டு
வந்திருக்கின்றீர்கள்.தமிழ் மொழியின்
மீதும் இந்து கலாசாரத்தின் மீதும்
நீங்கள் கொண்டிருக்கும் தீராத
நேசிப்பை நீங்கள் வெளிப்படுத்தியிருப்பதையிட்டு
நான் மனந்திறந்து பாராட்டுவதுடன் ஆண்டு
தோறும் எடுத்து வருகின்ற இவ்வாறான ஆய்வரங்குகளின்
ஊடான கலைلل இலக்கிய மற்றும் தமிழ்மொழி
வளர்ச்சியின் முயற்சி குறித்து மகிழ்ச்சி
அடைவதுடன் அகமகிழ்ந்து இந்த முயற்சியை
பாராட்டுவதாகவும் கலை இலக்கியம் சமூக
முன்னேற்றம் தமிழ்மொழி வளர்ச்சி என்று
பல்துறைகளும் சார்ந்த பன்முகச் சிந்தனைகள்
எமது தேசமெங்கும் செழித்து வளர
வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மாறுதல் ஒன்றைத் தவிர மனித சமூக வரலாற்றில்
மாறாதிருப்பது எதுவுமே இல்லை என்பதையே
இந்த மாற்றங்கள் எமக்குப் போதித்து
நிற்பதாகவும் ஓர் இன சமூகத்தின் அடையாளங்களில்
பிரதானமாக இருப்பது அந்த இன சமூகத்தின்
மொழி என்றே தான் கருதுவதாகத்
தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு
எமது பாரம்பரிய பக்தி இலக்கியங்களான
இந்து சமய இலக்கியங்களும் பற்றுறுதியோடு
நின்று பிரதான பங்காற்றியிருப்பதாகவும்
தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பக்தி
இலக்கியங்கள் ஆற்றியிருக்கும் அர்ப்பணங்களைப்
போல் இன்றைய சமகால இலக்கியப் படைப்பாளிகளும்
தொடர்ந்தும் அர்ப்பண உணர்வுகளுடன் உழைக்க
வேண்டும் என விரும்புவதாகவும் பழந்தமிழ்
இலக்கியங்களையும் பக்தி
இலக்கியங்களையும்
சிற்றிலக்கியங்களையும் ஆய்வு செய்வதுடன்
மட்டும் நின்று விடாது இன்றைய எமது மக்களின்
வாழ்க்கையை சித்திரிக்கும் நவீன இலக்கியங்களையும்
ஊக்குவித்து உற்சாகப்படுத்துவதற்கு
இலக்கிய முன்னோடிகளும் ஆர்வலர்களும்
முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாகவும்
அமைச்சர் டக்ளஷ் தேவானந்தா
தெரிவித்துள்ளார்.
கடந்த கால போரியல் வரலாறுகளை மட்டும்
ஒரு சாரார் இலக்கியங்களாகப்
படைத்திருப்பதாகவும் அது தவறானது அல்ல
என்ற போதிலும் அது உண்மையின் சாட்சியங்களாக
வெளி வரவேண்டும் என்றும் போரியல் வரலாற்று
இலக்கியங்கள் வீரத்தின் விளை நிலங்களை
மட்டும் பேசுவதுடன் நின்று விடாமல்
விவேகத்தின் விதை நிலங்கள் குறித்தும்
பேச வேண்டும் என்பதுடன் விவேகங்கள் எங்கு
விதைக்கப்பட்டன எங்கு விதைக்கப்படவில்லை
என்பன குறித்த தேடல்களில் இலக்கியங்கள்
இறங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா விதைக்கப்பட்டவைகள்
எவையோ அவைதான் அறுவடைக்கு வரும் என்ற
உண்மைகளையும் பேசியாக வேண்டும்
என்றும் எங்கெல்லாம் தவறுகள் நடந்தனவோ
அங்கெல்லாம் இலக்கியப்படைப்பாளிகளின்
பார்வைகள் யதார்த்தமாக விரிந்திருக்க
வேண்டும் என்பதுடன் போரியல் வரலாற்றுக்குள்
அகப்பட்டு நொந்து நொடிந்து வெந்து
துடித்த எமது சமூகத்தின் அவஸ்தைகளும்
இலக்கியங்களாக்கப்பட வேண்டும் என்றும்
தெரிவித்துள்ளார்.
இலக்கியப் படைப்பாளிகள் சுதந்திரமாக
எழுதுவதற்கும் பேசுவதற்கும்
சிந்திப்பதற்கும சுதந்திரமாக எங்கும்
நடமாடுவதற்குமான ஒரு ஜனநாயக சூழலின்
வரவிற்காக நாம் இறுதி வரை உறுதியுடன்
உழைத்திருப்பதுடன் இன்னமும் தடைகள்
இருக்குமாயின் அதற்காக நாம் தொடர்ந்தும்
உழைப்போம் எனத் தெரிவித்துள்ள அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா தங்களது உயிர்களைத்
தியாகம் செய்து செந்நீர் ஊற்றியே வளர்த்த
இலக்கியப் படைப்பாளிகளை இந்த இடத்தில்
ஞாபகமூட்டுவதற்கு விரும்புவதாகத்
தெரிவித்துள்ளதுடன் அவர்களது உயிர்த்
தியாகங்களுக்கு நாம் மரியாதை செலுத்த
வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கலையும் இலக்கியமும் பேசும் மொழியும்
எங்களை ஒன்றிணைத்து நிற்பதை இன்று நிகழ்ந்து
கொண்டிருக்கும் இந்து சமய தமிழ் இலக்கிய
ஆய்வரங்கின் ஊடாகக் காண முடிவதாகவும்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும்
தெரிவித்துள்ளார்.
--------------------
வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியின்
தலைமையில் வடக்கின் வசந்தம் அபிவிருத்திக்
கருத்திட்டம் தொடர்பான மீளாய்வு நிகழ்வொன்று
நேற்று வவுனியா மாவட்டச் செயலகத்தில்
நடைபெற்றுள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி
குறித்தும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள
அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும்
முக்கிய கவனம்
செலுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த
மீளாய்வு கூட்டத்தின் போது எதிர்கால
வேலைத் திட்டங்கள் தொடர்பாகக் கவனம்
செலுத்தப்பட்டுள்ளதுடன் வவுனியா நகரை
அண்டியுள்ள கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து
நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை
மீளக் குடியமர்த்துதல் தொடர்பில்
விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகவும் வவுனியா
மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.
-----------------------
வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த
550 முதியவர்கள் நேற்று அகில இலங்கை
இந்து மாமன்றம் மற்றும் வவுனியா
கோவில்குளம் கோவில் நிர்வாக சபையினால்
பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
செட்டிக்குளம் மெனிக்பாம் நிவாரணக்
கிராமத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற
இந்நிகழ்வில் போது அகில இலங்கை இந்து
மாமன்றம் 300 முதியவர்களைப்
பொறுப்பேற்றுள்ளதுடன் வவுனியா
கோவில்குளம் கோவில் நிர்வாகம் 250
முதியவர்களைப் பொறுப்பேற்றுள்ளதாகவும்
இவர்கள் திருக்கேதீஸ்வரம் சமன்குளம்
முதியோர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு
பராமரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் ஆண்டிப்புளியங்குளம்
முஸ்லிம் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த
1,300 இடம் பெயர்ந்த குடும்பங்கள் மருதமடுவ
நலன்புரி நிலையத்திற்கு
மாற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த பாடசாலையை
இயங்க வைப்பதற்கான முன்னோடி நடவடிக்கையாகவே
இக்குடும்பங்கள் இடமாற்றப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
-----------------------
வியட்நாம் குடியரசின் 64வது தேசிய தின
வைபவம் இரத்தினபுரியில்;இன்று நடைபெறவுள்ளது.
இரத்தினபுரி நவநகரிலுள்ள சமுர்தி மண்டபத்தில்
நடைபெறும் இந்த வைபவத்தில் வியட்நாம்
தூதுவர் க்வேன்ஹோன் சோன் விஷேட
அதிதியாக் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன்
இலங்கை- வியட்நாம் ஒத்துழைப்பு சங்கம்
ஏற்பாடு செய்துள்ள இந்த வைபவத்தில்
அமைச்சர்களான பேராசிரியர் திஸ்ஸ
விதாரன டியூ.குணசேகர சாலிந்த
திஸாநாயக்க டாக்டர் ராஜித சேனாரத்ன
உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளதும்
குறிப்பிடத்தக்கதாகும்.
------------------
ஆங்கில மொழிப் பயிற்சிக்கான மத்திய
நிலையம் ஒன்றை நிறுவுவதற்கான
உடன்படிக்கை ஒன்றில் இலங்கையும்
இந்தியாவும் ஜனாதிபதி செயலகத்தில்
கைச்சாத்திடவுள்ளன.
இந்நிகழ்வில் இலங்கை அரசாங்கத்தின்
சார்பில் கல்வியமைச்சர் சுசில் பிரேம்
ஜயந்த் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர்
லலித் வீரதுங்க ஆகியோர்;கலந்து
கொள்ளவுள்ளதாகவும் இந்திய
அரசாங்கத்தின் சார்பில் இந்திய
உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் மற்றும்
இந்திய மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தின்
உபவேந்தர் தலைமையில் துறை சார்ந்த
முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து
கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம்
தெரிவித்துள்ளது.
அரசாங்கம் இந்த ஆண்டை ஆங்கில மொழிப்
பயிற்சி ஆண்டாக
பிரகடனப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து
அதன் ஒரு அம்சமாகவே ஆங்கில மொழி
பயிற்சி மத்திய நிலையம்
நிறுவப்படவுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-----------------
லிபியப் புரட்சியின் 40வது வருட நினைவு
வைபவங்களில் கலந்து கொள்வதற்காக
லிபியாவுக்கு மூன்று நாள்
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை
நாடு திரும்பியுள்ளார்.
லிபியாவின் தலைவர் முஅம்மர் கடாபியின்
விசேட அழைப்பின் பேரில் அங்கு சென்ற
ஜனாதிபதிக்கு பெரும்
வரவேற்பளிக்கப்பட்டதுடன் இந்த
நிகழ்வுகளில் இடம்பெற்ற படையினரின்
அணிவகுப்பில் இலங்கைப் படை வீரர்களும்
பங்கு கொண்டனர்.
மஹிந்த ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாக
நியமிக்கப்பட்ட பின்னரே லிபியாவுடனான
உறவுகள் பலமடைந்துள்ளதுடன் லிபியாவுடன்
நெருக்கமான நட்பு நாடுகளின் தலைவர்களே
விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும்
இவ்விழாவில் கலந்து கொண்ட சுமார் 40
நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ இரு தரப்பு
பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-----------------
மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சை
வலதுகரை வாய்க்கால்களை படையினரின்
ஒத்துழைப்புடன் முழுமையாக புனரமைப்பு
செய்வதற்கு கிழக்கு மாகாணசபை நடவடிக்கை
மேற்கொண்டுள்ளது.
இத்திட்டம் பூர்த்தி செய்யப்படும்
பட்சத்தில் சுமார் 13 ஆயிரம் வயல்
நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி
கிடைக்கும் என
எதிர்பார்க்கப்படுவதாகவும் ஏற்கனவே
இப்பிரதேசம் புலிகளின்
கட்டுப்பாட்டின்கீழ் இருந்ததினால்
தூர்ந்துபோன வலதுகரை வாய்க்கால்களைப்
புனரமைப்பதில் நீர்ப்பாசன திணைக்களம்
சிக்கல்களையும் சிரமங்களையும்
எதிர்நோக்கியிருந்ததாககவும் இதன்மூலம்
8,000 ஏக்கர் வயல் நிலங்களுக்கு
மட்டுமே நீர் வழங்க முடிந்ததாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
உன்னிச்சை வலதுகரை வாய்க்கால்களின்
புனரமைப்பு வேலைகள் அண்மையில்
ஆரம்பித்துள்ளதாகவும் புனரமைப்பு
பணிகள் பூர்த்தியடைந்ததும் உன்னிச்சை
பிரதான நீர்ப்பாசனக் குளத்திலிருந்து
சேமிப்பிற்காக 8,சிறிய குளங்களுக்கும்
மேலதிகமாக 5,000 ஏக்கர் வயல்
நிலங்களுக்கும் நீர்ப்பாசனம மேற்கொள்ள
முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
---------------------
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில்
சிறைக் கைதிகளை பரிமாற்றம் செய்வது
குறித்து விரைவில் ஒப்பந்தம் ஒன்று
கைச்சாத்திடப்படவுள்ளதாக வெளிவிவகார
அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் அடுத்த இரு மாதகாலப்
பகுதியில் நடைபெறும் என வெளிவிவகார
அமைச்சின் மேலதிகச் செயலாளர் பிரசாத்
காரியவசம் தெரிவித்துள்ளதுடன் இதற்கான
வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக
மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்
இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம்
இந்த உடன்படிக்கையின் நகலை தயாரிக்கும்
சட்ட வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும்
உடன்படிக்கை எங்கு எப்போது
கைச்சாத்திடுவது என்று இன்னமும்
முடிவாகவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்
இந்தியாவில் சிறைதண்டனை விதிக்கப்பட்ட
இலங்கை கைதிகள் அவர்களின் மிகுதி
தண்டனை காலம் முடியும் வரை இலங்கை
சிறைகளிலேயே தடுத்து வைக்கப்படுவார்கள்
எனவும் இந்த நடைமுறையே இலங்கையில்
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும்
இந்திய கைதிகளின் விடயத்திலும்
பின்பற்றப்படும் எனவும் வெளிவிவகார
அமைச்சின் மேலதிக செயலாளர் பிரசாத்
காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.
---------------------
புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக
தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களின்
நோக்கத்தை நிறைவேற்றுவதிலும்
அவர்களுக்காக நிதி சேகரிப்பதிலும்
சிலர் ஈடுபட்டுள்ளதாக
அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர்
ஜாலிய விக்கிரமசு10ரிய
தெரிவித்துள்ளார்.
ஆசிய நிபுணர்கள் மத்தியில் கருத்துத்
தெரிவித்துள்ள ஜாலிய விக்கிரமசு10ரிய
இலங்கையில் இறுதியான சமாதானம் அரசியல்
தீர்வின் மூலமே ஏற்படும் என்றும்
வெளிநாடுகளிலுள்ள புலிகளின்
ஆதரவாளர்கள் சமாதானத்தைத் தோற்கடிக்க
முனைவதாகத் தெரிவித்துள்ள
அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர்
நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஏற்றுக்
கொள்ளக் கூடிய விதத்தில் அரசியல்
தீர்வை முன்வைப்பதற்கு அரசாங்கம் உரிய
நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத்
தெரிவித்துள்ளதும்
குறிப்பிடத்தக்கதாகும்.
-------------------
நாட்டில் தற்போது மக்கள் சுதந்திரமாச்
சிந்தித்து சுதந்திரமாக வாக்களிக்கக்
கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை
நடைபெற்று முடிந்துள்ள யாழ்.மாநகர
சபைத் தேர்தலும் வவுனியா நகர சபைத்
தேர்தலும் எடுத்துக் காட்டுவதாகவும்
இதனாலேயே வடக்கில் உள்ள10ராட்சித்
தேர்தல்களை நடாத்துமாறு வேண்டுகோள்
விடுத்துள்ளதாக ஈ.பி.டி.பி.யின்
செயலாளர் நாயகமும் சமூக சேவைகள்
மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான
டக்ளஸ் தேவானந்தா இன்று கொழும்பிலுள்ள
அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற
செய்தியாளர் மாநாட்டின் போது
தெரிவித்துள்ளார்.
தேர்தல் மோசடிகள் வன்முறைகள்
நடபப்பதாகச் சில அரசியல் தலைவர்கள்
தமது சுயலாப அரசியலை முன்னெடுக்கும்
பொருட்டு பல்வேறு வதந்திகளைச்
செய்திகளாகப் பரப்பி வந்துள்ள
நிலையில் நடந்து முடிந்த தேர்தல்கள்
மிகவும் நேர்மையாகவும் மக்கள்
சுதந்திரமாக வாக்களித்துள்ளதினை
நிரூபிப்பதாகவும் அமைந்துள்ளதாகத்
தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா ஈ.பி.டி.பி.யை வன்முறைக்குத்
தூண்டும் வகையில் மாற்றுக் கட்சிகள்
நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் அத்தகைய
முயற்சிகளுக்கு நாம் ஒருபோதும் இடம்
கொடுக்கவில்லை என்றும் கடந்த காலத்
தேர்தல்களில் பெற்றுக் கொண்ட
அனுபவங்கள் வன்முறைகளுக்கு இடம்
கொடுக்கவில்லை என்றும்
தெரிவித்துள்ளார்.
ஆயுதப் போராட்டத்தில் பெற்றுக் கொண்ட
15 வருட அனுபவமும் ஜனநாயக வழிமுறைகளில்
பெற்றுக் கொண்ட 20 வருட அனுபவமும்
எதிர்காலத்தில் தமிழ்பேசும்
மக்களுக்கான பூரணமான ஜனநாயகச் சூழலைத்
தோற்றுவிப்பதற்கு உறுதுணையாக அமையும்
எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா தற்போது யாழ்.குடா நாட்டு
மக்கள் சகல துறைகளிலும் முன்னேறி
வருவதுடன் பூரணமான ஜனநாயகச் சூழலை
நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும்
தெரிவித்துள்ளார்.
புலித் தலைமையின் பிரச்சினை வேறு
தமிழ்பேசும் மக்களின் பிரச்சினை வேறு
என்பதைத் தற்போது அனைவரினாலும்
புரிந்து கொள்ள முடிவதாகவும்
இத்தகையதொரு சூழலில் மக்களின் ஜனநாயக
உரிமைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும்
தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைப்
பிரச்சினைகளுக்கு நடைமுறைச்சாத்தியமான
தீர்வு காண்பதற்கும் கட்சிகள்
மத்தியில் பரந்த ஐக்கியத்திற்கான
அழைப்பு விடுப்பதாகவும் இன்றைய
செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா மேலும்
தெரிவித்துள்ளார்.
-----------------
கொலராடே கப்பல் மூலம் இலங்கைக்கு
எடுத்து வரப்பட்ட வவுனியா நலன்புரி
முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான
உணவுப் பொருட்களின் தரம் குறித்து
சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை
செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 31ம் திகதி கொலராடோ கப்பல்
மூலம் இந்த பொருட்கள் எடுத்து
வரப்பட்டதாகவும் அப்பொருட்களை
இடம்பெயர்ந்தோர் மத்தியில்
விநியோகிப்பதற்கு செஞ்சிலுவைச் சங்கம்
திட்டமிட்டுள்ள நிலையில்
விநியோகத்திற்கு முன்னர் தகரத்தில்
அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் பிஸ்கட்
வகைகள் குளிர்பானங்கள் மற்றும்
பாலுணவுகள் உட்பட்ட ஐந்து பொருட்கள்
தரநிர்ணயத்திற்கு
உட்படுத்தப்படவுள்ளதாகவும் இதற்கான
செலவை இலங்கை செஞ்சிலுவை சங்கம்
செலுத்தியுள்ளதாகவும் இலங்கை
செஞ்சிலுவை சங்கத்தின் நடவடிக்கை
பணிப்பாளர் சுரேன் பீரிஸ்
தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
--------------------
மஹிந்த சிந்தனையின் அடிப்படையிலான
அனைவருக்கும் மின்சாரம் செயற்திட்டத்தை
தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக
மின்சக்தி எரிசக்தி அமைச்சர்
டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன
தெரிவித்துள்ளார்.
ஹெட்டிபொலவில் நேற்று இடம்பெற்ற
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு
உரையாற்றிய மின்சக்தி அமைச்சர்
மின்சாரம் மற்றும் தனிநபர் விரும்பம்
என்பவற்றுக்கிடையில் தொடர்பு
உள்ளதாகவும் தற்போதைய நிலையில் நாட்டு
சனத்தொகையில் 80,சதவீதமானோர்
மின்சாரத்தை பயன்படுத்துவதாகவும்
மேலும் தெரிவித்துள்ளார்.
------------------
இந்தியாவின் ஆந்திர மாநில முதலமைச்சர்
எஸ்.ராஜசேகரரெட்டி கெலிஹொப்டர்
விபத்தில் உயிரிழந்துள்ளதாக இந்திய
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்
அறிவித்துள்ளார்.
ராஜசேகரரெட்டி பயணம் செய்த கெலிஹொப்டர்
மலைப்பகுதியில் மோதி தீப்பிடித்ததில்
அவரும் விமானி உள்ளிட்ட ஏனைய நான்கு
பேரும் அதே இடத்தில் கருகி
உயிரிழந்திருப்பது இன்று காலை உறுதி
செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்று காலை
ஹைதராபாத்தில் இருந்து சித்தூருக்கு
ராஜசேகர ரெட்டி பயணம் ஹெலிகொப்டருடனான
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும்
நேற்று முதல் அந்த கெலிஹொப்டரைத்
தேடும் பணியில் இந்திய விமானப்படை
கெலிஹொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டதுடன்
தரைமார்க்கமாகவும் தேடும் பணி
இடம்பெற்றதாகவும் இந்திய உள்துறை
அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை சுமார் 8.30 மணியளவில் ஒரு
மலைப்பகுதியில் கெலிஹொப்டர் பல
பாகங்களாக உடைந்து கருகிய நிலையில்
கிடப்பது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்
கர்னூலில் இருந்து சித்தூருக்கு
தெற்குத் திசையில் செல்ல வேண்டிய
ஹெலிகொப்டர் கிழக்குத் திசையில் சென்று
மலைப்பகுதியில் மோதியிருப்பதாகத்
தெரிவித்துள்ள இந்திய மத்திய உள்துறை
அமைச்சர் ப.சிதம்பரம் கமாண்டோக்கள்
அந்தப் பகுதியில் இறக்கப்பட்டு
சடலங்களைத் தேடியபோது ஐந்து சடலங்கள்
கருகிய நிலையில் கிடப்பது உறுதி
செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர்
ராஜசேகர ரெட்டியுடன் அவரது
பிரத்தியேகச் செயலாளர் சுப்ரமணியம்
பாதுகாப்பு அதிகாரி மற்றும் இரு
பைலட்டுகள் ஆகியோரும்
உயிரிழந்துள்ளதாகவும் மேலும்
தெரிவித்துள்ளார். |