வணக்கம்!
இதயவீணையின் செய்திகள்!! 04.09.2009
செய்தி ஆசிரியர் :- ஷோபா
வாசித்தளிப்பவர் :- சுபாஷினி
முதலில் தலைப்புச் செய்திகள்!!!
இடம்பெயர்ந்த
மக்களில் 30,000 பேரை 35 கிராமங்களில்
மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர்
ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
யாழ்.மாநகர
சபையின் பிரதி மேயர் பதவியை முஸ்லிம்
பிரதிநிதிக்கு வழங்குவது தொடர்பாக
ஈ.பி.டி.பி.க்கும் அகில இலங்கை
முஸ்லிம் காங்கிரஸ{க்கும் இடையில்
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கையின்
ஆடை உற்பத்தித் துறைக்கு எத்தகைய
பாதிப்புக்களும் இல்லை என தகவல்
ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன
யாப்பா தெரிவித்துள்ளார்.
வடக்குக்
கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தித்
திட்டங்களில் முதலீடு செய்வதற்குப் பல
தனியார் நிறுவனங்களுக்கு முதலீட்டு சபை
அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கொழும்பில்
நடைபெறவுள்ள பாடசாலை மாணவர்களிற்கான
தேசிய விளையாட்டுப் போட்டியில்
யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 500
மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்களில் 30,000 பேரை 35
கிராமங்களில் மீள்குடியமர்த்துவதற்கான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி
தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்திற்கிணங்க
7,795,குடும்பங்களைச் சேர்ந்த மக்கள்
35,கிராமங்களில்
மீள்குடியமர்த்தப்படவுள்ளதாகவும்
இதற்கென மாங்குளம் நொச்சிமோட்டை
சலம்பைக்குளம் பம்பைமடு ஆகிய கிராம
சேவகர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களைப்
பார்வையிட்டுள்ள வடமாகாண ஆளுநர்
குடியேற்றப்படும் மக்களின் தேவைகள்
தொடர்பாகச் சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுடன்
கலந்துரையாடியுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த மக்களைக்
குடியமர்த்துவதற்குத் தெரிவு
செய்யப்பட்டுள்ள கிராமங்களைத் துப்பரவு
செய்து நீர் மின் விநியோகங்களை
ஏற்படுத்துவதற்கும் வீதிகளைத்
திருத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை
மேற்கொண்டு வருவதுடன் மீள்குடியேற்றத்
திட்டம் இன்னும் சில வாரங்களில்
பூர்த்தியடைந்து விடும் எனவும்
இதற்காகத் தமக்கு ஒத்துழைப்பு வழங்கிய
அனைத்து அதிகாரிகளுக்கும் பாதுகாப்புத்
தரப்பினருக்கும் தமது நன்றி
தெரிவித்துக் கொள்வதாகவும் வடமாகாண
ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி மேலும்
தெரிவித்துள்ளார்.
-------------------
யாழ்.மாநகர சபையின் பிரதி மேயர் பதவியை
முஸ்லிம் பிரதிநிதி ஒருவருக்கு
வழங்குவது தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக்
கட்சிக்கும் அகில இலங்கை முஸ்லிம்
காங்கிரஸ{க்கும் இடையில் நேற்றைய தினம்
ஒப்பந்தம் ஒன்று
கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்
செயலாளரும் கல்வியமைச்சருமான சுசில்
பிரேம் ஜயந்த் முன்னிலையில்
கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்
நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்
தேவானந்தாவும் அகில இலங்கை முஸ்லிம்
காங்கிரஸ் சார்பில் அமைச்சர் ரிஷாத்
பதியூதீனும் கைச்சாத்திட்டுள்ளனர்.
இன்னும் ஒரு வருட காலத்தில் கணிசமான
முஸ்லிம் குடும்பங்கள்
யாழ்.மாவட்டத்தில் மீள்குடியேறியதின்
பின்னர் யாழ்.மாநகர சபையின் பிரதி
மேயர் பதவியை அகில இலங்கை முஸ்லிம்
காங்கிரஸ் பிரதிநிதி ஒருவருக்கு
வழங்குவதற்கு இணக்கப்பாடு
காணப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் அகில
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்
செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீத்
மற்றும் யாழ்.மாநகர மேயராகத் தெரிவு
செய்யப்பட்டுள்ள திருமதி யோகேஸ்வரி
பற்குணராஜா ஆகியோரும் கலந்து கொண்டதும்
குறிப்பிடத்தக்கதாகும்.
-----------------
திஸ்ஸநாயகம் ஓர் ஊடகவியலாளர் என்பதை
ஏற்றுக் கொள்கின்ற போதிலும் அவருடைய
செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது
என்றும் நீதிமன்றத்தால் அவருக்கு
வழங்கப்பட்ட 20 வருட கடூழிய சிறைத்
தண்டனை ஊடக சுதந்திரத்திற்கு
எதிரானதல்ல என தகவல் ஊடகத்துறை
அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா
தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று
இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்
போது கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர்
அனுர பிரியதர்ஷன யாப்பா பயங்கரவாதத்
தடுப்புச் சட்டத்தின் கீழ் திஸ்ஸநாயகம்
கைது செய்யப்பட்டு வழக்குத் தாக்கல்
செய்யப்பட்டதாகவும் நாட்டில் சட்டம்
பொதுவானது என்பதால் அனைவரும் பார்க்கக்
கூடிய வகையில் பகிரங்கமான முறையிலேயே
அவருக்கெதிரான விசாரணைகள்
நடைபெற்றதாகவும் அந்த விசாரணையின்
அடிப்படையிலேயே அவருக்கு தற்போது
சிறைத் தண்டனை
விதிக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவித்துள்ளார்.
சட்டத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை
வைத்துக் கொண்டு அது ஊடக சுதந்திரத்தை
பாதிப்பதாகக் கூறுவதை எவ்வகையிலும்
ஏற்றுக் கொள்ள முடியாது என்றும்
நாட்டில் ஊடகச் சுதந்திரத்திற்கு
எத்தகைய பாதிப்பும் இல்லை என்பதைத்
திட்டவட்டமாகக் கூற முடியும் என்றும்
அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா
மேலும் தெரிவித்துள்ளார்.
------------------------
இலங்கையின் ஆடை உற்பத்தித் துறைக்கு
எத்தகைய பாதிப்புக்களும் இல்லை என
தகவல் ஊடகத்துறை அமைச்சர் அனுர
பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று
இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை
அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர்
சந்திப்பில் உரை நிகழ்த்திய அமைச்சர்
அனுர பிரியதர்ஷன யாப்பா சுனாமியின்
பின்னர் ஆடை உற்பத்தித்
தொழிற்சாலைகளுக்கான ஜீ.எஸ்.பி. வரிச்
சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் அடிக்கடி
நீடித்துக் கொண்டே வந்ததாகவும்
இலங்கையின் நிலைப்பாடு குறித்து
சர்வதேச சமூகத்துக்கு நன்கு
தெளிவுபடுத்தியுள்ளதாகத்
தெரிவித்துள்ளதுடன் இலங்கை தொடர்பாக
எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள்
குறித்து ஐக்கிய நாடுகள் சபை மற்றும்
சர்வதேச மனித உரிமைகள் சபை
ஆகியவற்றிற்கே விளக்கமளிக்க முடியும்
என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஆடைக் கைத்தொழில் துறைக்கு
இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை
என்றும் தொடர்ந்தும் முதலீடுகள்
கிடைத்து வருவதுடன் புதிய
தொழிற்சாலைகளும் ஆரம்பிக்கப்பட்டு
வருவதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர்
அனுர பிரியதர்ஷன யாப்பா கடந்த சில
தினங்களுக்கு முன்னர் திருகோணமலையிலும்
ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையொன்று
திறந்து வைக்கப்பட்டதாகவும் மேலும்
தெரிவித்துள்ளார்.
---------------------------
கண்டி மாவட்டத்தில் டெங்கு நோய்
மீண்டும் தீவிரமாகப் பரவ
ஆரம்பித்துள்ளதாக டெங்கு நோய் தடுப்பு
மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
கடந்த சில தினங்களில் டெங்கு நோய்
பரவுதல் கட்டுப்பாட்டுக்குள் இருந்த
போதிலும் தற்போது பெய்துவரும் மழை
காரணமாக நுளம்புகள் பெருகி நோய்
பரவுவது அதிகரித்துள்ளதாகவும் கண்டி
மாவட்டத்தில் நேற்று வரை 3,249 பேர்
அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்
இதுவரையில் இம்மாவட்டத்தில் 30 பேர்
இந்நோய் காரணமாக மரணமாகியுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் இதுவரை 24,984
நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 245
பேர் மரணமடைந்துள்ளதாகவும் கேகாலை
கம்பஹா கொழும்பு குருநாகல் களுத்துறை
ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோய்
பரவுவதாக நோய்த் தடுப்பு மத்திய
நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
---------------------------
தெனியாய பகுதியில் பொலிஸாரால் கைது
செய்யப்பட்ட மூன்று
ஊடகவியலாளர்களினதும் பாதுகாப்புக்கு
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர்
நாயகம் அநுஷ பெல்பிட்ட
தெரிவித்துள்ளார்.
தெனியாய பகுதியில் வைத்து
ஊடகவியலாளர்கள் மூவர் பொலிஸாரால் கைது
செய்யப்பட்ட சம்பவம் குறித்து நேற்றுக்
காலை தமக்கு தகவல் கிடைத்தாகவும்
சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு
இச்சம்பவம் குறித்து விசாரணைகளை
மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள
அரசாங்கத் தகவல் திணைக்களத்தின்
பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட இச்சம்பவம்
தொடர்பாக பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு
கொண்டு கைது செய்யப்பட்டுள்ள
ஊடகவியலாளர்களுக்கு எத்தகைய
பாதிப்புகளும் ஏற்படாத வகையில்
நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என
வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் மேலும்
தெரிவித்துள்ளார்.
---------------------------
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்
புற்றுநோய் பிரிவொன்றை அமைப்பதற்கு
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான பிரேரனையை சுகாதார அமைச்சர்
நிமல் சிறிபால டி சில்வா
முன்வைத்திருந்ததுடன்لل 100
கட்டில்களைக் கொண்ட புதிய விடுதித்
தொகுதி ஒன்றும் 10 கட்டில்களைக் கொண்ட
தீவிர கண்காணிப்புப் பிரிவொன்றும்
இங்கு நிறுவப்படவுள்ளதாகவும்,
இத்திட்டத்திற்கான 10 கோடி ரூபா நிதி
ஒருங்கிணைக்கப்பட்ட நிதியூடாகப்
பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ராகம போதனா வைத்தியசாலையில்
அவசர சிகிச்சைப் பிரிவு அறுவை சிகிச்சை
நிலையம் உள்ளிட்ட சகல வசதிகளையும்
கொண்ட பிரிவுகளை அமைப்பதற்கும்
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளதுடன்,இதற்காக 85 மில்லியன்
ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கண்டி
பிரதான வைத்தியசாலையில் சிகிச்சைக்கான
கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காக 85
மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதும்
குறிப்பிடத்தக்கதாகும்.
---------------------------
வடக்குக் கிழக்கு மாகாணங்களின்
அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடு
செய்வதற்குப் பல தனியார்
நிறுவனங்களுக்கு முதலீட்டு சபை
அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மட்டக்களப்பு திருகோணமலை யாழ்ப்பாணம்
அம்பாறை மற்றும் மன்னார் ஆகிய
மாவட்டங்களில்
அறிமுகப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித்
திட்டங்களின் வேலைகள் விரைவில்
ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் 9 பில்லியன்
ரூபா நிதியை குறிப்பிட்ட தனியார்
நிறுவனங்கள் இந்த திட்டங்களில் முதலீடு
செய்யவுள்ளதாகவும் அரச முதலீட்டு சபை
தெரிவித்துள்ளது.
கால்நடை அபிவிருத்தி பழம் மற்றும்
மரக்கறிச் செய்கை அரிசி ஆலைகள் மீன்
பதனிடுவதற்கான ஐஸ் உற்பத்தி பால்
உற்பத்தி விவசாயப் பண்ணை ஹோட்டல்கள்
கப்பல் திருத்த வேலைகள் ஆடை உற்பத்தி
மற்றும் ஜெனரேக்டர்கள் உற்பத்தி போன்ற
துறைகள் இத்திட்டங்களில்
உள்ளடங்குவதாகவும் இவற்றில் சில
திட்டங்களை அமுல்படுத்துவதற்குப்
பிரான்ஸ் பிரித்தானியா அவுஸ்திரேலியாக
மலேசியா சுவிற்சர்லாந்து இந்தியா
ஜப்பான் மற்றும் சவுதி அரேபியா போன்ற
நாடுகள் உதவ முன் வந்துள்ளதாகவும்
முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.
----------------------
யாழ்.கைதடியில் ஆயுர்வேத நடமாடும்
சேவையொன்றினை நடத்துவதற்கு சுதேச
மருத்துவ மற்றும் ஆயுர்வேத திணைக்களம்
தீர்மானித்துள்ளது.
இதற்கிணங்க இரு தினங்கள் இந்த நடமாடும்
சேவையினை நடாத்தவுள்ளதாக சுதேச
மருத்துவ வைத்திய அமைச்சர் திஸ்ஸ
கரலியத்தை தெரிவித்துள்ள அதேவேளை
யாழ்.கைதடி பிரதேசத்தில்
நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆயுர்வேத
நிலையம் மற்றும் அச்சுவேலி மருத்துவ
நிலையம் என்பன எதிர்வரும் 6ம்திகதி
சுதேச மருத்துவ வைத்திய அமைச்சர்
திஸ்ஸ கரலியத்தையினால் திறந்து
வைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
----------------
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக விஷேட
தேவையுடையவர்களுக்கான விசேட ரயில்
நிலையம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கு
அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவ்வாறு அமைக்கப்படவுள்ள விஷேட
தேவையுடையவர்களுக்கான விசேட ரயில்
நிலையத்திற்காக ஒரு கோடியே 60 லட்சம்
ரூபாய் செலவிட தீர்மானித்துள்ளதாகவும்
அமைக்கப்படவுள்ள ரயில் நிலையத்தின்
முதலாவது நிலையம் ஓமந்தையில்
அமைக்கப்படவுள்ளதாக சமூக சேவைகள்
மற்றும் சமூக நலத்துறை பிரதியமைச்சர்
லயனல் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
விஷேட தேவையுடையவர்களுக்கான
அமைக்கப்படவுள்ள ரயில் நிலையத்திற்கு
மனிதாபிமான தங்குமிட நிலையமென
பெயரிடுவதற்குத்
தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக
சேவைகள் மற்றும் சமூக நலத்துறை
பிரதியமைச்சர் லயனல் பிரேமசிறி மேலும்
தெரிவித்துள்ளார்.
---------------------
கொழும்பில் நடைபெறவுள்ள பாடசாலை
மாணவர்களிற்கான தேசிய விளையாட்டுப்
போட்டியில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த
500 மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர்.
முதற்கட்டமாக இன்றைய தினம்
321,விளையாட்டு வீரர்களும்
62,விளையாட்டுப் பொறுப்பாசிரியர்களும்
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு
ஏ-9 பாதையின் ஊடாக பஸ்களின் மூலம்
அழைத்துச் செல்லப்படுவதாகவும்
இரண்டாவது குழுவினர் எதிர்வரும் 10ம்
திகதி அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மன்னாரில் கடந்த மாதம்
இடம்பெற்ற மாகாண மட்டப் போட்டிகளில்
முதல் மூன்று இடங்களையும் பெற்றுக்
கொண்ட வீர வீராங்கனைகளே கொழும்பில்
நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டிகளில்
பங்குபற்றவுள்ளதும்
குறிப்பிடத்தக்கதாகும்.
----------------------
யாழ்.மாவட்டத்திலுள்ள பொலிஸ்
நிலையங்களில் கடமையாற்றுவதற்காக
500,தமிழ் இளைஞர்களைப் பொலிஸ் சேவையில்
இணைத்துக் கொள்வதற்குப் பொலிஸ்
திணைக்களத்தினால்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்பின் பேரில்
யாழ்.மாவட்டத்தில் பொலிசாருக்கும்
பொதுமக்களுக்குமிடையில் நல்லுறவை
மேம்படுத்துவதற்கும் பொலிஸ்
நிலையங்களில் முறைப்பாடுகளைத் தமிழில்
பதிவு செய்து விசாரணைகளை
மேற்கொள்வதற்கும் இந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்
சேவையில் இணைந்து கொள்வதற்கு
விருப்பமுள்ளவர்களிடமிருந்து அடுத்த
வாரம் விண்ணப்பங்கள்
கோரப்படவுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் சேவைக்கு
விண்ணப்பித்தவர்களிற்கான நேர்முகப்
பரீட்சையை நடாத்துவதற்குப் பொலிஸ்
திணைக்கள உயர் அதிகாரிகள் குழு
யாழ்ப்பாணத்திற்குச்
செல்லவுள்ளதாகவும் இந்த நடவடிக்கையின்
மூலம் யாழ்.மாவட்டத்தில் குற்றச்
செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கும்
சிவில் பாதுகாப்பு விடயங்களைத்
தீவிரப்படுத்த முடியும் எனவும்
யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் தெரிவித்துள்ளதும்
குறிப்பிடத்தக்கதாகும்.
---------------------
கிழக்கிலும் வடமத்திய பிரதேசத்திலும்
வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி
வங்கியின் உதவியைப் பெற்றுக்
கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
இதற்கான பிரேரணையை அமைச்சர் பந்துல
குணவர்தன முன்வைத்திருந்ததாகவும்لل
இத்திட்டத்திற்கிணங்க 70 மில்லியன்
அமெரிக்க டொலர் நிதி ஆசிய அபிவிருத்தி
வங்கியிடமிருந்து கடனாகப் பெற்றுக்
கொள்ளப்படவுள்ளதாகவும் இந்த நிதியின்
மூலம் கிழக்கில் 150 கிலோ மீற்றர்
தூரமான வீதியும் வடமத்திய பிரதேசத்தில்
220 கிலோ மீற்றர் தூரமான வீதியும்
புனரமைக்கப்படவுள்ளதுடன்
இப்பிரதேசங்களை உள்ளடக்கிய பாலங்கள்
மற்றும் மதகுகள் என்பவையும்
மறுசீரமைக்கப்படவுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
---------------------
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு
நோய்த் தாக்கத்தினால் 12 பேர்
மரணமடைந்துள்ளதுடன் 1,500 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டத்
தொற்றுநோய் தடுப்பு அதிகாரி டொக்டர்
தட்சணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தற்போது இம்மாவட்டத்தில் டெங்கு நோய்
பரவுதல் பூரணக் கட்டுப்பாட்டின் கீழ்
கொண்டு வரப்பட்டுள்ள போதிலும்
எதிர்வரும் மாதம் பருவமழை
ஆரம்பமாவதினால் மீண்டும் டெங்கு நோய்
ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத்
தெரிவித்துள்ள டொக்டர் தட்சணாமூர்த்தி
டெங்கு நோயை ஒழிக்கும் நோக்கில்
தற்போது புகை அடிக்கும் நடவடிக்கைகள்
தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும்
தெரிவித்துள்ளார்.
இதேவேளை காத்தான்குடி ஆரையம்பதி
களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு ஆகிய
பிரதேச செயலகப் பிரிவுகளிலேயே
அதிகமானவர்கள் டெங்கு நோயினால்
மரணமடைந்துள்ளதாக மாவட்டத்
தொற்றுநோய்த் தடுப்பு அதிகாரி
தெரிவித்துள்ளதும்
குறிப்பிடத்தக்கதாகும். |