<%@ Language=JavaScript %> Welcome./\. Welcome. !
 

எங்கள் தேசம் இணையம்

 

www.engaltheaasam.com Welcome To Visit   

 
 

 

 

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்.செப்டம்பர்,04, 2009

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

தமிழ் தேசியத்தின் மீது பற்றுதல் கொண்டிருப்பவர்கள் கற்றுணர்ந்து கொள்ள பட்டுணர்ந்த தமிழ் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றே சொல்லிவைத்த சிந்தனை இது!....

புலிகளின் தலைமை இன்று அழிக்கப்பட்டு விட்ட நிலையில் அவர்கள் கொண்டிருந்ததமிழ் தேசியத்தை கைவிடுவதா?.... அல்லது தூக்கிப்பிடிப்பதா??... இந்த ஒரு சர்ச்சைக்குள் தமிழ் அரசியல் தளம் அகப்பட்டிருக்கின்றது….

புலிகளை தவிர மாற்று அரசியலாளர்கள் அல்லது மாற்று ஐனநாயக தலைமைகள் தமிழ் தேசியத்தை கைவிட்டவர்கள் என்ற மாயை என்பது தேற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும்…புலிகள் அன்று கொண்டிருந்த தமிழ் தேசியத்தின் உண்மை தன்மை என்ன என்பது குறித்து ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் ஆற்றிய உரையை வாசகர்களின் பார்வைக்கு தருகின்றோம்.

தனது உரிமை மடல் என்ற வானொலி உரையில் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆணி அறைந்தது போல் தூரப்பார்வையோடு சொல்லி வைத்த சில விடயங்கள் இன்று நடந்து முடிந்திருக்கின்றது.

எது இங்கு நடந்தது?... தமிழ் தேசியம் குறித்து ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது பார்வையில் எதை சொல்ல வருகின்றார்.

உண்மையில் புரட்சிகரமான முற்போக்கான பன்மைத்துவமிக்க தேசிய விடுதலை அரசை நிறுவுவதற்கு தம்முயிரை நீர்த்த புலிகளினால் கொல்லப்பட்ட புலிகளின் இயக்கத்திலிருந்து கொல்லப்பட்ட அனைவருக்கும் பிரபாகரன் தமது அதிகார வெறியினால் துரோகமிழைத்து விட்டதை விரைவில் தமிழர் அரசியல் போராட்ட வரலாறு எழுதிவைக்கும்!

இவ்வாறு தனது உரையில் அன்று தெரிவித்திருந்தார் தோழர் டக்ளஸ் தோவானந்தா அவர்கள்.

அன்பான எம் தேசத்து மக்களே!....

உலகெங்கும் பரந்து வாழும் என் தேசத்து உறவுகளே!

உங்களுக்கு வணக்கம்!

எங்களது தேசத்தில் இன்னமும் அபகரிக்கப்படாமல்
ஒரு சாண் நிலமாவது எங்களுக்காக எஞ்சியிருக்கும் வரை....

ஒடித்துப்போட்டாலும் மறுபடி எழுந்து நடக்கும்
எங்கள் நம்பிக்கைகளின் கால்களில் தென்பு இருக்கும் வரை....

எங்கள் கைகளிலிருந்து ஆயுதங்கள் அகன்று போனாலும்
எங்கள் மனங்களில் எழுச்சி கொள்ளும் ஆத்ம பலம் இருக்கும் வரை...

எமது மக்களாகிய உங்களது தேசிய அபிலாசைகளை சுமந்து நடக்கும் ஈ.பி.டி.பி யின் சார்பாக மீண்டும் ஒரு உரிமை மடலோடு உங்களை நான் சந்திக்கின்றேன்!.

தேசிய விடுதலைப்போராட்டம் என்பது ஆதிக்க சக்திகள் மோதிக்கொள்ளும் அதிகாரத்திற்கான போராட்டம் அல்ல! ஒடுக்கப்படுகின்ற ஒரு தேசிய இனத்தின் அரசியல் பொருளாதார சமூக விடுதலையை முன்நிறுத்திய மக்களாட்சியை நிறுவுவதற்கான போராட்டமாகவே அது இருக்க முடியும்!

எமது தேசத்தில் இன்று தேசியத்தின் பெயரால் மக்களின் நலன்களுக்கு மாறான ஆதிக்க சக்திகள் பாசிச வடிவத்தில் அக்கிரமங்களை நடத்திக் கொண்டிருப்பதால்......

எமது மக்களாகிய உங்களது தேசிய அபிலாசைகளை வென்றெடுக்கும் இலட்சியக்கனவுகளோடு மாற்று வடிவத்தில் ஈ.பி.டி.பி யினராகிய நாம் உறுதிகொண்டு உழைக்க எண்ணியவர்கள் என்பதால்....

தேசியம் குறித்து நடைமுறைச் சாத்தியமான சில விடயங்களை மக்களாகிய உங்களோடு நான் மனம் திறந்து பேச விரும்புகின்றேன்!

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையானது நீண்டகால வரலாற்றைக் கொண்டது.தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை புலிகளுடனும் பிரபாகரனுடனும் தொடங்கியதல்ல இந்த உண்மையை சிலர் தற்போது வசதியாக மறந்து விடுகின்றனர்.புலிகளும் அதன் ஊடகங்களும் நமது மக்களை மறக்கடிக்கச் செய்வதில் தொடர்ந்தும் சாகசம் புரிந்து வருகின்றன.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை என்பது காலனித்துவ ஆட்சியின் போதே உருவாகியிருந்த ஒன்று! பிரித்தானியர் இலங்கையை விட்டுச் சென்றதன் பின் இலங்கைத் தேசத்தை ஒரு சிங்கள பௌத்த தேசமாக அடையாளப்படுத்தியதில் இருந்து விசுவரூபமெடுத்த பிரச்சினைதான் தேசிய இனப்பிரச்சினை!

1956ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் தனிச்சிங்களச்சட்டம் என்பது கொண்டுவரப்பட்டபோது அன்றைய பேரினவாத கட்சிகள் ஏட்டிக்கு போட்டியாக அதை பிரடகனப்படுத்தியிருந்தன.

அப்போது இடதுசாரி இயக்க தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர்.டி சில்வா அவர்கள் அது குறித்து மிகத்தெளிவான கருத்தை முன்வைத்திருந்ததையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்!

இருமொழி ஒரு நாடு ஒருமொழி இரு நாடு. இரண்டு மொழிக்கொள்கை என்பது இலங்கையை ஒரு நாடாகவே வைத்திருக்கும்!...ஒரு மொழிக்கொள்கை என்பது இலங்கையை இரு நாடுகளாக பிரிக்கவே வழி வகுக்கும் என்று எச்சரிக்கையோடு தெரிவித்திருந்தார்.

கொல்வின் ஆர்.டி. சில்வா அவர்களின் தீர்க்கதர்சனமிக்க அந்த கருத்து எமது தேசத்தில் 1970 களின் ஆரம்பங்களில் நிதர்சனமாக்கப்பட்டது!

தமிழ் பேசும் மக்கள் ஒரு தேசிய இனம்! எமக்கென்றொரு பொதுவான மொழி! பொதுவான பொருளாதாரம்!பொதுவான பண்பாடு!பொதுவான வரலாற்று வாழ்விட நிலம்!அது மட்டுமன்றி இவைகள் குறித்த உணர்வுகளும் எம்மிடையே மேலோங்கி இருப்பதால் நாங்கள் ஒரு தேசிய இனம் என்ற உயரிய அந்தஸ்தினை பெற்றிருப்பவர்கள்!

அன்று மொழி ரீதியாக மட்டுமன்றி எமது பொருளாதார வளங்ளும் சுரண்டப்பட்டன!திட்டமிட்ட வகையில் ஏற்படுத்தப்பட்ட குடியேற்றங்களால் எமது மக்களின் வாராற்று வாழ்விடங்கள் அத்துமீறியவகையில் அபகரிக்கப்பட்டன. எமது மக்களின் மதம் சாரந்த பண்பாட்டு வழிமுறைகளின் தனித்துவங்கள் விழுங்கப்பட்டன.

அதை விடவும் கல்வியில் பாரபட்சம் காட்டப்பட்டது என்பதும் பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல் என்பனவால் எமது இளைஞர் சமுதாயத்தின் உணர்வுகளை மேலும் நெய் ஊற்றி பெரும் சுவாலையாக எரிய வைத்தது!

எம் இனிய மக்களே!நாங்கள் தற்செலாக அரசியலுக்கு வந்தவர்களல்ல!நாங்கள் எமது மக்களாகிய உங்களது அரசியல் அபிலாசைகளுக்காக களமிறங்கியது வெறுமனே ஒரு விபத்து அல்ல! காலத்தின் கட்டாயம் எங்களது கைகளில் ஆயுதங்களை ஏந்தச்சொல்லி கட்டளையிட்டது!

ஒடுக்கும் தேசிய இனத்தில் இருந்து ஒடுக்கப்படுகின்ற ஒரு தேசிய இனம் பிரிந்து போவதில் உள்ள சுயநிர்ணய உரிமை கோட்பட்டின் நியாயங்களே எம்மை அன்று ஆயுதம் ஏந்திப்போராட வைத்தது!

தேசிய இனங்களுக்கு இருக்க வேண்டிய சுயநிர்ணய உரிமை குறித்தும் நாம் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படை கோட்பாடு குறித்தும் தெளிவான சிந்தனைகளோடுதான் நாங்கள் போராட்டக்களத்தில் புகுந்தவர்கள்!

வெறும் தனிநபர் பயங்கரவாத நடவடிக்கையினூடாக ஆயுதம் ஏந்திய வன்முறையாளர்களாக அரசியலுக்கு வந்திருந்த புலிகள் கூறிவரும் தேசியத்திற்கும்

நாம் கூறும் தேசியத்திற்கும் இடையிலான வேறுபாடு என்பது பாரிய முரண்பாடுகளை கொண்டது!

தேசியம் என்ற கோரிக்கையினை தமது பாசிச அரசியல் வன்முறைக்கு நியாயம் கற்பிக்கும் ஒரு வழிமுறையாகவே புலிகள் இன்று அதை பயன்படுத்தி வருகின்றனர்.

வன்முறை என்பது இரண்டு வகைப்பட்டது!ஒன்று ஒடுக்கும் வன்முறை!இன்னொன்று ஒடுக்கும் வன்முறைக்கு எதிரான புரட்சிகர வன்முறை என்பதாகும்!

புலிகள் முன்னெடுத்து வரும் வன்முறை என்பது ஒடுக்குமுறையாளர்களின் வன்முறையை ஒத்ததாகவும் அதை விடவும் மிக மோசமாக சொந்த இனத்தையே கொன்றொழிக்கும் பாசிச வடிவத்தை கொண்டதாகவும் இன்று உருவெடுத்து நிற்கிறது!

ஒரு தேசிய இனத்தின் விடுதலைப்போராட்டம் என்பது புரட்சிகர வன்முறையினையே அடிப்படையாக கொண்டதாக இருக்கவேண்டும் என எண்ணியே நாம் அன்று ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள்!

இது குறித்த விடயங்களை இன்னொரு சந்தர்ப்பத்தில் நான் உங்களோடு பேசலாம் என நினைக்கின்றேன்!

தேசியத்திற்கான கோரிக்கை என்பதும் முற்போக்கு தேசியம் பிற்போக்கு தேசியம் என இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தலாம் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்!

ஏனெனல் தேசியம் என்பது மதில் மேல் பூனை போன்றது!அது எந்தப்பக்கம் விழுகின்றதோ அந்தப்பக்கத்தில் நின்றே அது தனது காரியங்களை ஆற்றும்!

தேசியம் என்பது பிற்போக்கு அரசியல் சாக்கடையில் தவறி விழுந்துவிடாதபடி அதை சரியான பக்கம் வழிநடத்திச்செல்ல வேண்டியது தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் சக்திகளின் வரலாற்றுக்கடமையாகும்!

அல்ஜீரிய புரட்சியின் பின் அம் மக்களின் நிலைபற்றி தேசிய புரட்சி எழுத்தாளரும்ää சிந்தனையாளருமான பிரான்ஸ் பனன் இப்படிச் சொன்னார்.

அனைத்து மக்களின் உள்ளார்ந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைய வேண்டிய தேசிய உணர்வு ஒரு வெற்றுக்குடுவையாகவே இருந்தது என்றார்! தேசியம் என்பது எப்படி தேசிய வெறியாகவும் இன வெறியாகவும் மாறியது என்பது பற்றி அவர் சொல்லும்போது தேசியம் நம்மை இறுதியில் ஒரு குருட்டுச்சந்திற்கே இழுத்துச்சென்றுவிடும் என்றார்!

ஆம் இந்த வரலாற்று அனுபவத்தையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்!

ஒடுக்கப்படுகின்ற ஒரு தேசிய இனத்தின் போராட்ட சக்திகளின் கடமை என்பது ஒடுக்கும் தேசிய இனத்திலுள்ள தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் சுயநிர்ணய உரிமைக்கான நியாயத்தன்மைகளை எடுத்துக்கூற வேண்டும்! அதற்காக ஒடுக்கும் தேசிய இனத்தின் மத்தியிலுள்ள முற்போக்கு சக்திகளோடு தங்களது உறவுகளை ஏற்படுத்தி அதை பலப்படுத்த வேண்டும்!

அந்த வகையில் நாம் எமது ஆயுதப்போராட்டத்தை நடத்தியிருந்த காலங்களில் சிங்கள முற்போக்கு சக்திகளோடு உறவுகளை பலப்படுத்தியிருந்தோம்! எமது சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையினை நாம் சிங்கள மக்கள் மத்தியில் எடுத்து விளக்கியிருந்தோம்!

ஆனால் புலிகள் அதற்கு மாறாகவே நடந்து கொண்டார்கள்! அரச எதிர்ப்பில் ஈடுபட வேண்டிய புலிகள் அப்பாவி சிங்கள மக்களை கொன்றொழித்தார்கள்!பால் மணக்கும் குழந்தைகள் முதற்கொண்டு தள்ளாடும் வயோதிபர்கள் வரை அவர்களது வணக்க ஸ்தலங்களிலேயே வைத்து கொன்றொழித்தார்கள்!

அதனூடக புலிகள் தங்களது எதிரிகள் சாதாரண சிங்கள் மக்கள் என்பதை நிரூபித்துக்கொண்டனர். அது மட்டுமன்றி பேரின வாதம் என்பது எந்தளவிற்கு கொடுமையானதோ அதே அளவிற்கு தமிழ் தேசிய வாதமும் கொடுமையானது என்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிக்கொண்டனர். பேரின வாதத்திற்கு எதிராக தாங்கள் முன்னெடுப்பது ஒரு குறுந்தேசிய வாதம் என்பதை வராற்றில் எழுதிக்கொண்டனர்.

இதனால் சிங்கள குடி மக்களினதும் சிங்கள முற்போக்கு சக்திகளினதும் வெறுப்பினை தாங்களாகவே அறுவடையாக்கிக்கொண்டனர்.

இதனால் தமிழ் தேசியம் என்பதை புலிகள் பிற்போக்கு தேசியமாக ஆக்கிக்கொண்டனர்.

தேசியம் என்பது குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓடும் விளையாட்டு அல்ல! எல்லைகள் கடந்து தேசியம் என்பது சர்வதேசியமாக வளர்க்கப்படவேண்டிய ஒன்று!

அதற்காக சர்வதேச அரங்கில் இருக்கும் முற்போக்கு சக்திகளோடு மனித நேயத்தையும் மானிட விடுதலையையும் விரும்பும் சக்திகளோடு நாம் உறவுகளை பலப்படுத்தி செயற்பட்டவர்கள்!

அதற்காக நாம் முதன் முதலில் ஏற்படுத்திக்கொண்ட சர்வதேசிய உறவு ஒடுக்கப்படுகின்ற மக்கள் என்ற ரீதியில் உரிமைப்போராட்டத்தினை முன்னெடுத்து செல்லும் போராட்ட சக்திகளின் உறவைத்தான்!ஆகவேதான் நாம் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் உறவுகளை ஏற்படுத்தி அந்த மண்ணில் நாங்கள் ஆயுதப்பயிற்சினையும் எடுத்துக்கொண்டோம்!

ஆனால் புலிகளோ பாலஸ்தீன மக்களை ஒடுக்கி வரும் இஸ்ரவேல் நாட்டுப்படையினரிடம் தங்களது ஆயுதப்பயிற்சினை பெற்றுக்கொண்டனர். புலிகளது சர்வதேசிய நிலைப்பாடு விடுதலைப்போராட்ங்களை ஒடுக்கும் சக்திகளினது உறவாகவே இருந்து வருகின்றது.

மனித நேயத்தையும் ஐனநாயகத்தையும் விரும்பும் நாடுகளின் உறவுகளை கூட புலிகள் இழந்து நிற்கின்றனர்.குறிப்பாக அகதிகளாக ஓடிப்போன மக்களாகிய உங்களை வரவேற்று ஆதரித்துக்கொண்ட இந்தியாவின் இளம் அரசியல் தலைவர் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றொழித்ததன் மூலம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு அனுசரணையாக இருந்த அயல் உலக - இந்திய அரசியல் உறவை புலிகள் பகைத்துக் கொண்டனர்.அந்த வகையில் புலிகளின் ஒடுக்கும் வன்முறை நிலைப்பப்பாடு என்பது இன்று இந்தியா உட்பட பல்வேறு நாடுகளினதும் வெறுப்பினையே அறுவடையாக்கிக்கொண்டது!

இன்று எமது மக்களாகிய உங்களது அரசியலுரிமைக்கான நியாயத்தன்மைகள் என்பது மூடி மறைக்கப்பட்டு எமது போராட்டம் என்பது வெறுமனே ஒரு பயங்கரவாதிகளின் போராட்டமாக உலக நாடுகளினால் சித்தரிக்கப்பட்டு வருகின்றது! பல்வேறு நாடுகளும் புலிகளை பயங்கரவாதிகள் என கருதி அவர்களை தடைசெய்யப்பட்ட இயக்கமாக பிரகடனப்படத்தி வருகின்றன!

ஆகவே எமது மக்களாகிய உங்களது தேசியக்கோரிக்கையினை புலிகள் பயங்கரவாதிகளின் கோரிக்கையாக உருவாக்கிக்கொண்டனர்.எமது தேசிய விடுதலைப்போராட்டத்தின் நியாயத்தன்மைகளை தங்களது பயங்கரவாத நடவடிக்கைகளினால் புலிகளே சிதறடித்துக்கொண்டனர்.

ஒரு தேசிய விடுதலைப்போராட்டத்தில் ஒடுக்கப்படுகின்ற தேசிய இனத்திலுள்ள அனைத்து இனக்குழுக்களையும் சமூகக்குழுக்களையும் அரவணைத்துச் செல்லவேண்டியது தேசிய விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்துச்செல்லும் சக்திகளது பாரிய கடமையாகும்!அந்த வகையில் நாம் மலையக மக்கள் இஸ்லாமிய மக்கள் என்று சகல இனக்குழுக்களையும் சேர்த்தே எமது விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்து வந்தவர்கள்!

அந்த மக்களின் தனித்துவங்களை அங்கீகரித்ததுடன் ஒடுக்கப்படுகின்ற தேசிய இனக்குழுக்கள் என்ற வகையில் அவர்களோடு நாம் கைகோர்த்து நின்றிருந்தோம்!

ஆனால் புலிகள் அதற்கு நேரெதிர் மாறான காரியத்தையே செய்து முடித்திருந்தனர். பேரினவாதம் என்பது எவ்வாறு தமிழ் தேசிய இனத்தை ஒடுக்கியதோ அது போலவே தமிழ் தேசிய இனத்தில் இருக்கும் சிறுபான்மை தேசிய இன மக்களையும் புலிகளின் தமிழ் குறுந்தேசிய வெறி என்பது அடக்க முற்பட்டிருந்தது!

பேரின வாதத்தால் அடித்து விரட்டப்பட்ட தமிழ் தேசிய இனத்தைப்போல புலிகளின் பிற்போக்கு குறுந்தேசிய வாதம் என்பது இஸ்லாமிய மக்களை அடித்து விரட்டியது!

தமிழ்த்தேசிய வாதமானது வட கிழக்கைப் பொறுத்தவரை மொழியை அடிப்படையாகக்கொண்டு முதன்மைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை புலிகள் வெளியேற்றியது தமிழ்த் தேசியத்தின் பன்முகத் தன்மையை அதனது பண்பாட்டு கலாசார தன்மையை பாசிசமயமாக்கியது.

அதன் மூலம் புலிகள் எமது தேசிய விடுதலைப்போராட்டத்தின் மீது பிற்போக்கு சகதியை பூசிக்கொண்டனர்.இஸ்லாமிய மக்களை தூரவைத்து அவர்களை பகைத்துக்கொண்டதன் மூலம் எமது தேசியத்திற்கான கோரிக்கையினை புலிகள் பலவீனப்படுத்தியிருந்தனர்.

ஒடுக்கப்படுகின்ற ஒரு தேசிய இனத்திலிருந்து பல்வேறு சக்திகளும் எழுச்சி கொண்டு போராட்டக்களம் நோக்கி வருவது இயல்பான ஒன்று! ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற அரசியல் பன்மைத்துவ அடிப்படையில் அது ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய ஒன்று! போராட்டக்களத்தில் அனைத்து இயக்கங்களும் இணைந்த ஐக்கிய முன்னணியின் தேவை என்பது உணரப்டவேண்டும்!

நாம் பலம் பொருந்திய ஒரு அரச இயந்திரத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தும் போது அரச இயந்திரத்தை சுற்றி அதன் நேச நாடுகளும் உலக வல்லரசுகளும் பாதுகாப்பு அரணாக எழுந்து நிற்பது அரசுக்கு பலம் சேர்க்கும் விடயமாகும்!

இவைகளுக்கு எதிராக நாம் கொண்டிருக்க வேண்டிய பலம் என்பது ஐக்கிய முன்னணி தந்திரோபாயம் மட்டுமே பிரதான விடயமாகும்!எதிரிக்கு எதிராக அசையக்கூடிய சிறு துரும்பையும் அரவணைத்து செல்வதே தேசிய விடுதலைப்போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் விடயமாகும்!

அந்த வகையில் 1984 இன் நடுப்பகுதியில் நான் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்திற்கு தளத்தில் தலைமைதாங்கி இருந்த காலகட்டத்தில், நான்கு இயக்கங்கள் - ஈரோஸ்,ஈ.பி.ஆர்.எல்.எவ்,புலிகள் ரெலோ இணைந்து கொண்ட ஐக்கிய தேசிய முன்னணி என்பது எம்மால் உருவாக்கப்பட்டது! ஈழ தேசிய விடுதலை முன்னணி என்ற அந்த அமைப்பு ஏற்படுத்திய ஒற்றுமையின் பலம் கண்டு உலகமே வியந்து நின்ற வேளையில் ஒற்றுமைக்கு ஆப்புவைத்தனர் புலிகள்!தோளிலே கைபோட்ட பிரபாகரன் குழுவினர் முதுகிலே குத்தியது போல் வஞ்சகத்தனமாக சக இயக்கங்களை தடைசெய்து சிதைத்தனர்.

கூட இருந்த இயக்கத்தவர்களை கொன்று குவித்ததன் மூலம் புலிகளே எமது தேசியம் குறித்த இலட்சிக்கனவுகளை கலைத்திருந்தனர். புலிகள் கூறும் தமிழ் தேசியம் என்பது நண்பன் யார்?... பகைவன்யார் என்று தெரியாத குருட்டுத்தேசிய வாதமாகவும் வரட்டுத்தேசியவாதமாகவும் தனது சுயரூபத்தை காட்டி நின்றது!

எம் நேசத்திற்குரிய தேசத்து மக்களே!

புலிகள் கூறும் தமிழ் தேசியம் என்பது இது வரை எதை அறுவடைசெய்திருக்கின்து என்பதை நீங்கள் சிந்திக்கவேண்டும்!சர்வதேச உறவுகளை நண்பர்களாக ஏற்றுக்கொண்டதா?...எமது போராட்டத்தின் நியாயத்தனமைகளை புரிந்த கொண்ட அப்பாவி சிங்கள் மக்களையோ அன்றி அந்த மக்கள் மத்தியிலிருக்கும் முற்போக்கு சக்திகளை நண்பர்களாக ஏற்றுக்கொண்டதா?...தமிழ் தேசிய இனத்தின் ஒரு அங்கமாக இருக்கவேண்டிய முஸ்லிம் மக்களை நண்பர்களாக ஏற்றுக்கொண்டதா?தேசிய விடுதலைக்காக எழுந்த சக இயக்கங்களை நண்பர்களாக ஏற்றுக்கொண்டதா?... அல்லது தமிழ் மக்களை தான் நண்பர்களாக ஏற்றுக்கொண்டதா?...

பரந்து விரிந்த உலகத்தில் புலிகள் கொண்டிருக்கும் தேசியம் என்பது யாருடைய அங்கிகாரத்தையும் அறுவடையாக்கிக்கொண்ட வரலாறு இதுவரை இல்லை!

உலக சமூகமே இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை 1986க்கு முன் மிகச் சரியாகவே புரிந்து வைத்திருந்தது ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அனுதாபம் கொண்டிருந்தது புலிகள் மக்களின்மீது பாசிசத்தை கட்டவிழ்த்து விட்டதன் பின் இத்தகைய நிலை கணிசமாக மாறியது என்பதே உண்மையாகும்! ஏனெனில் ஒடுக்கப்படும் மக்கள் ஒடுக்குமுறையாளர்களாக அல்லது அந்த ஒடுக்குமுறையை ஆதரிப்பதற்கு ஒரு போதுமே துணைபோக முடியாது!

     தமிழ்த் தேசியம் தமிழர் அரசு என்கிற கருத்தியலை வரலாற்றில் சிதைத்தது பிரபாகரன்தான். தமிழ்த் தேசியப் போராட்டத்தை புலிகள் பாசிச அர்த்தத்தில் முன்னெடுக்க விழைந்ததும் அதனை பாசிச தமிழ்த் தேசிய வாதமாக உருமாற்றியதும்தான் - ஈழத் தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினை இதுவரை தீர்க்கப்படாததற்கு பிரதான காரணமாகும்.

   தமிழ்த் தேசத்துடைய தேசிய விடுதலையும் வெறும் கருவிகள் மூலம் அடையப்படலாம் என நம்பியதும் இன்றும் அதனை வலியுறுத்துவதும் அபத்தமானதும் ஆபத்தானதுமான சிந்தனைப்போக்காகும். இந்த நிலை தமிழ் மக்களின் அழிவிற்கே வழிவகுக்கும்.

தமிழ் தேசியம் என்ற பெயரில் தமிழ் மக்களை தினமும் அழித்துவரும் அரசியலையே புலிகள் தொடர்ந்தும் மேற்கொள்கின்றனர்.தமிழர்களை தமிழர்களே கொல்லும் நிலையை உருவாக்கியுள்ளார் பிரபாகரன்.

நமது மக்களின் நியாயமான அரசியல் உணர்வினை புலிகளின் பாசிசம் இப்படித்தான் தொடர்ந்தும் தவறாகப் பயன்படுத்தி வருகிறது.

எந்த விடுதலைப் போராட்டமும் மக்களை கொடூரமாக ஒடுக்கி புரட்சிகர சக்திகளை அழித்தொழித்து மக்களை அந்நியப்படுத்தி வெற்றி பெற்றதாக வரலாறே இல்லை.

நீண்டகாலமாய் தமிழ் மக்களுக்குள் புலிகள் மக்களை அடக்குகின்ற மாற்று ஜனநாயக சக்திகளை ஒடுக்குகின்ற சக்தியாக பரிணமித்து விட்டனர். புலிகள் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் ஒரு இயக்கமல்ல அது தனது தனி அதிகாரத்தை நிலை நாட்டுவதற்கே மிகத் தெளிவாக சான்று ஆதாரத்துடன் போராடுகிறது பலி எடுக்கிறது பலி கொடுக்கிறது.இந்த உண்மையை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டதன் பின்னிருந்து இன்று வரை நாம் காணலாம்!

சொந்த இனத்தையே கொன்றொழிக்கும் தங்களது பாசிசவெறியை மூடி மறைப்பதற்கே புலிகள் கூறும் தேசியம் பயன்படுகிறது!

மக்களாகிய உங்களை அடக்கி தங்களது ஆளும் அதிகாரத்தை தக்கவைப்பதற்கே புலிகள் கூறும் தேசியம் பயன்படுகிறது!

மக்களாகிய உங்களது விடுதலை குறித்தோ அல்லது உங்களது வாழ்வியல் உரிமை குறித்தோ புலிகள் கூறும் தேசியம் என்பது இது வரை எந்த வகையில் பங்காற்றியிருக்கிறது என்பதை நான் பகிரங்கமாக கேட்க விரும்புகிறேன்!

ஒரு பொது மகனை அல்லது மாற்றுக்கருத்துக்கொண்டவனை அல்லது என் தேசத்துக்குடிமகனை கொன்று பலியாக்கி விட்டு தெருவில் எறிகின்றது புலிப்பாசிசம்!

இதை தமிழ் தேசியம் என்று கருதி.....கை கட்டி.... வாய் பொத்தி.... நின்று தமிழ் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என யாராவது விரும்புகிறீர்களா?...

எமது தேசத்துக் குடிமகன் ஒருவனின் உழைப்பை சுரண்டும் புலிப்பாசிசத்தை கண்களை மூடிக்கொண்டு இதுதான் தேசியம் என்று தமிழ் சமூகம் ஆதரிக்க வேண்டும் என யாராவது விரும்புகிறீர்களா?...

புலிகள் அதிகார ஆதிக்க சக்தி அது தமிழ் மக்கள் முன் தூக்கிப் பிடிக்கும் தேசியவாதமானது மிகவும் ஆபத்தானதும் நவீன மனித சமுதாயத்தால் நிராகரிக்கப்படக் கூடியதுமாகும்.தேசிய விடுதலையின் வெற்றி என்பது மக்கள் விடுதலையுடன் சம்பந்தப்பட்டதாகும்.மக்களுக்கு கருத்து சுதந்திர உரிமை சிந்தனை உரிமை மறுக்கப்படுவது தேசிய விடுதலைப் போராட்டமென அர்த்தப்படுத்த முடியாது. மக்கள் விடுதலை அடைவதை நோக்காகக் கொண்டு அல்லாமல் தேசியப் போராட்டம் முன்னெடுக்கப்பட முடியாது ஒன்றில்லாமல் மற்றொன்;றில்லை..

இன்று தமிழ்த் தேசியத்தின் பெயரால் அதன் உண்மையான அர்த்தத்தை அழித்துச் சிதைத்த புலிகளின் நடவடிக்கைகளை சிலர் தமது சொந்தத் தேவைக்காக நியாயப்படுத்த முனைந்துள்ளனர். இவர்கள் அதிகாரத்தின் பொறியிலும் அச்சத்தின் வலையிலும் சிக்கி விழுந்தவர்கள். பாசிசத்தை எதிர்க்க முடியாது என்ற மாயையின் காரணமாக பாசிசத்திற்கு ஆதரவு அளிக்கின்றனர். அதன்மூலம் தமிழர் சமூகத்தின் நியாயமான அரசியல் நிலைப்பாடுகளுக்கு எதிராக செயலாற்றுகின்றனர்.இந்தக் கண்ணோட்டத்தையும் இதனை மேற்கொள்பவர்களையும் நாம் தொடர்ச்சியாக செயற்படுவதன் மூலமே மாற்ற முடியும்.இத்தகைய தவறான புரிதல்களை ஜனநாயக ரீதியாக எதிர்ப்பதன் மூலமே நாம் நியாயமான விரிந்த தமிழ்த்தேசத்தை நிலைநிறுத்த முடியும்.

உண்மையில் புரட்சிகரமான முற்போக்கான பன்மைத்துவமிக்க தேசிய விடுதலை அரசை நிறுவுவதற்கு தம்முயிரை நீர்த்த புலிகளினால் கொல்லப்பட்ட புலிகளின் இயக்கத்திலிருந்து கொல்லப்பட்ட அனைவருக்கும் பிரபாகரன் தமது அதிகார வெறியினால் துரோகமிழைத்து விட்டதை விரைவில் தமிழர் அரசியல் போராட்ட வரலாறு எழுதிவைக்கும்!

பாசிசத்தின் கொடுமையினால் அவஸ்தைப்படும் எமது மக்களின் அவலக்குரல்களை தேசியத்தின் குரலால் மழுங்கடித்துவிடலாம் என கனவு கண்டாலும் வரலாறு உண்மைகளை மட்டும் எழுதி வைக்கும்!

எம் இனிய மக்களே!புலிகளின் பாசித்தை எதிரப்பவர்கள் என்பதால் நாம் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்களல்ல!

தேசியம் குறித்தும் சுயநிர்ணயம் குறித்தும் நாம் கொண்டிருக்கும் கருத்தியலும் அதன் செயற்பாடுகளும் நடைமுறைச்சாத்தியமானவைகள் மட்டுமே!

உலகில் முதன் முதலில் எழுந்த சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் என்பது ஐரிஸ் மக்களின் விடுதலைப்போராட்டமாகும்!

ஒடுக்கும் தேசிய இனத்திலிருந்த ஒடுக்கப்படுகின்ற ஒரு தேசிய இனம் பிரிந்து போவது மட்டுமே சுயநிர்ணய உரிமைக்கான உண்மையான அர்த்தம் என்ற எண்ணக்கருக்களில் எழுந்த தேசிய விடுதலைப்போராட்டமே ஐரிஸ் மக்களது விடுதலைப்போராட்டம்!

1970களின் ஆரம்பங்களில் நாம் கொண்டிருந்த நிலைப்பாடும் இதுதான் என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்! தேசிய இனப்பிரச்சினை என்பது கூர்மையடைந்திருந்த ஒரு வரலாற்று கால கட்டத்தில் நாங்கள் தேசிய விடுதலைக்கான கோரிக்கையினை முன்னெடுத்திருந்தோம்!

ஆனாலும் எமது அகநிலையிலும் புறநிலையிலும் உருவாகியிருந்த மாற்றங்கள் என்பன எமது போராட்டப்பாதையில் ஒரு மாறுதலை வேண்டி நின்றது! அந்த வரலாற்று ரீதியான மாறுதல்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஆகும்!

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்பு தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைக்கான முன்னெடுப்புக்களில் முட்டுக்கட்டையாக இருப்பது சிங்களப் பேரினவாதத்தின் மிச்ச சொச்ச என்பதைவிடவும் பாசிச வடிவத்தில் புலிகளால் முன்னெடுக்கப்படும் தமிழ் குறுந்தேசியவாதமேயாகும்.

பிரபாகரன் தனக்காகவும் தனது சகாக்களுக்குமான அதிகாரத்தைப் பெறுவதற்கே தமிழ் தேசியவாதத்தை ஒரு போதைவஸ்தாக பயன்படுத்தி வருகின்றார்.

ஆனாலும் தமிழ் தேசியத்திற்கான கோரிக்கை குறித்தோ அல்லது எமது மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை குறித்தோ நாம் தொடர்ந்தும் தெளிவான ஒரு நிலைப்பாட்டினையே கொண்டிருக்கின்றோம்!

பிரிந்து போவது மட்டும் தான் சுயநிர்ணய உரிமை என்பது அர்த்தமாகிவிடாது! உலகில் மிகப்பழமை வாய்ந்த சமஷ்டி ஆட்சி என்பது கனடாவின் கியூபெக் மாநிலம் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்!

19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஐரிஸ் மக்கள் பிரிந்து போவதற்கான போராட்டமொன்றை ஆரம்பித்திருந்த அதே காலப்பகுதியில்தான் கனடாவிலும் கியூபெக் மாநிலத்திற்கு சமஷ்டி அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இந்த சமஷ்டி தீர்வானது சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து போவதற்கான போராட்டத்தை கொண்டது மட்டுமல்ல இவ்வகையாக ஒரு இணக்கமான வழிமுறையிலும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்பதை உலகிற்கு ஆதார பூர்வமாக எடுத்துக்காட்டிய ஒரு வரலாற்று நிகழ்வாகும்!

இணக்கமான வழிமுறையில் சமஷ்டி ஆட்சியை பெற்றுக்கொள்வதென்பது தேசியம் குறித்த எங்களது அடையாளங்களையே அன்றி சுயநிர்ணய உரிமை குறித்த அம்சங்களையே நாம் இழந்து விட்டதாக அர்தமல்ல!

மாறி வரும் உலக அரசியல் சூழல் என்பது எமது தேசத்திலும் ஒரு சமஸ்டி ஆட்சிமுறையினையே வேண்டி நிற்கிறது!

ஈ.பி.டி.பி யினராகிய நாங்கள் அதிகாரப்பரவாலக்கல் என்பது வேறு! அதிகாரப்பகிர்வு என்பது வேறு என்பதை திட்டவட்டமாக வரையறுத்தே செயற்பட்டு வருகின்றோம்!

அதிகாரப்பரவாக்கல் என்பது மத்தியிலுள்ள அதிகாரங்களை சம அளவில் பரவலாக்கிக்கொள்ளும் ஒன்றாகும்!

ஆனால் அதிகாரப்பகிர்வு என்பது தேவைக்கேற்றவாறு அதிகாரங்களை பகிர்தளிக்கும் ஒன்றாகும்!

தாகம் எடுத்ததவனுக்கும் தண்ணீர் அதிகம் தேவைப்படுவது போல்.... பசித்திரப்பவனுக்கு உணவு அதிகமாக தேவைப்படவது போல் இன்று தமிழ் பேசும் மக்களுக்கு அதிகமான உரிமைகள் தேவைப்படகின்றன.

கனடாவில் கியூபெக் மாநிலத்திற்கு விஷேட அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பது போலவே எமது மக்களின் வரலாற்று வாழ்விடமான வடக்கு கிழக்கிற்கு விஷேட அதிகாரங்களை ஈ.பி.டி.பி கோரி நிற்கின்றது!

எமது மக்களாகிய உங்களது தேசிய அடையாளங்களை தொடர்ந்து பாதுகாப்பதற்காகவே ஈ.பி.டி.பி நடைமுறை சாத்தியமாகச் சிந்தித்து செயலாற்றி வருகின்றது!

சுயநிர்ணய உரிமைக்கான உண்மையான அர்த்தத்தினை ஒரு சமஷ்டி ஆட்சியின் ஊடாக அடைய முடியும் என ஈ.பி.டி.பி திடமாக நம்புகிறது!

சொந்த இனத்தை சுயமாக சிந்திக்க விடாது தடுப்பது சுயநிர்ணயம் அல்ல!
சொந்த இனத்தின் மீது ஆதிக்க அதிகாரம் செலுத்துவது தேசியமும் அல்ல!..

மக்களின் உதடுகள் மறுபடி திறக்கவும்....
மக்கள் ஆட்சி எங்கள் மண்மீது மலர்ந்து செழிக்கவும்.....
உறுதியுடன் உழைத்து வரும் ஈ.பி.டி.பி சார்பில் அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் அறை கூவல் விடுக்கின்றேன்!

எமது தேசிய அடையாளங்களை பாதுகாப்பதற்காகவும்
சுயநிர்ணய உரிமையினை வென்றெடுப்பதற்காகவும்
மனித நேயப்பண்புகள் எமது மண்மீது வாழவேண்டும் என்பதற்காகவும்
நாங்கள் ஒன்று படுவோம்!

எங்கள் நிலத்தில்...
மக்கள் பலத்தில்....
எழுந்து நிற்போம்!....

மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!
தேசத்திற்காக தியாகங்களை ஏற்போம்!
என்றும் நாம் மக்களுக்காக!....

பிரியமுடன்!.....
தோழர் டக்ளஸ் தேவானந்தா!

<<முன்னைய பதிவுகள்>>

 

Last update: 20-06-2008. Desigin and Copyright Welcome. to Visit.Engaltheaasam.com ..!