வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி
செய்வதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அவர்கள் மிகுந்த அக்கறையுடன்
செயற்பட்டார்-வடமாகாண ஆளுநர்
யாழ் மாவட்டத்தில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டார் என வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி அவர்கள் தெரிவித்தார்.
யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்றைய தினம் (15) இடம்பெற்ற வடமாகாண வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வடமாகாணத்திற்கென 92 வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும், 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகள் புனரமைக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருவதாகவும் சுட்டிக்காட்டிய ஆளுநர் அவர்கள் குறிப்பாக யுத்தத்தால் சேதமடைந்த கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகள் உள்ளிட்ட பிரதேச வைத்தியசாலைகளும் தற்போது புனரமைக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் வடமாகாணத்தில் காணப்படும் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைவாகவே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் காணப்படும் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் என்னுடன் இணைந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டார் எனவும் சென்ற வருடத்தை விட இவ்வருடம் வைத்தியர்களின் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யூட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சுகாதார அமைச்சின் வடமாகாண செயலாளர் ரவீந்திரன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.