ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின்
சிறந்த வழிகாட்டலின் மூலம் தேசத்தின்
நிழல் தேசிய நிகழ்வு.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் சிறந்த வழிகாட்டலின் மூலம் இந்த நாடு பல முன்னேற்றங்களைக் கண்டுவரும் அதேவேளை விரைவில் பசுமைமிக்க வளமான தேசமாக உருவெடுக்கும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் இன்றைய தினம் (15) பசுமை நாடு வளமான தேசம் என்னும் தொனிப் பொருளில் தேசத்தின் நிழல் தேசிய மரநடுகை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நாட்டி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் தேசத்தின் நிழல் என்ற இத்திட்டம் இன்றைய நாளில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களினது சிறந்த தலைமைத்துவத்தின் கீழும் வழிகாட்டலின் கீழும் இந்நாடு தற்போது பல்வேறு அபிவிருத்திகளில் முன்னேற்றம் கண்டு வருவதோடு விரைவில் பசுமை மிக்கதொரு வளமான தேசமாகவும் உருவாகும் என்பதுடன் இந்த மாவட்டத்தின் மரநடுகைத் திட்டத்திற்காக பழைய பூங்கா வளாகம் தெரிவு செய்யப்பட்டமை பாராட்டப்பட வேண்டியது என்றும் தெரிவித்தார்.
அத்துடன் பழைய பூங்காவின் ஒரு பகுதியைப் புனரமைத்து அதனை மக்களின் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் அதேவேளை நகரின் அருகாகவுள்ள இப்பகுதியை பாதுகாக்கப்பட வேண்டியதும் வளமாக்க வேண்டியதும் நம் ஒவ்வொருவரினது கடமையுமாகுமென்றும் இம் மாவட்டத்தின் அபிவிருத்தியில் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி அவர்கள் ஆற்றிவரும் பங்கு முக்கியமானது என்றும் குறிப்பிட்ட அமைச்சர் அவர்கள் எதிர்காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு அபிவிருத்திப் பணிகளில் அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பையும் ஒத்தாசையையும் வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
யாழ் பழைய பூங்கா வளாகத்தில் மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசியக் கொடியினை அமைச்சர் அவர்களும் மாகாணக் கொடியினை ஆளுநர் அவர்களும் மாவட்டக் கொடியினை மேலதிக அரச அதிபரும் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து மங்கள விளக்குகளும் ஏற்றி வைக்கப்பட்டன.
நாடளாவிய ரீதியில் 11 இலட்சம் மரக்கன்றுகளை நாட்டி வைக்கும் இம் மரநடுகைத் திட்டத்தின் கீழு 18 ஆயிரத்து 600 மரங்கள் யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடுகை செய்யப்படவுள்ளன.
இன்றைய தினம் காலை 9.01 மணியான சுபநேரத்தில் ஜனாதிபதி அர்கள் மரநடுகைத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் அதேவேளை நாட்டின் சகல பகுதிகளிலும் இம்மரநடுகை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மரநடுகைத் திட்டத்திற்கென விவசாயத் திணைக்களம் 3200 மரக்கன்றுகளையும், மாவட்ட செயலகம் 3500 மரக்கன்றுகளையும் வனவளத் திணைக்களம் 600 மரக்கன்றுகளையும் அரச மரக் கூட்டுத்தாபனம் 4650 மரக்கன்றுகளையும், பனை அபிவிருத்திச் சபை 5000 மரக்கன்றுகளையும் வழங்கியுள்ளன.
நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி அவர்களும் உரையாற்றினார்.
தேசத்தின் நிழல் என்னும் இத்தேசிய மரநடுகை நிகழ்ச்சித் திட்டம் சுற்றாடல் அமைச்சு ஜனாதிபதி செயலகம் அனைத்து அமைச்சுக்கள் மாகாண சபைகள் அரச நிறுவனங்கள் அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களால் நெறிப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.