ஒரு
சில தலைப்புச் செய்திகளை மட்டும்
வைத்துக் கொண்டு இனத்தின் கலாச்சாரம்
சீரழிந்து விட்டதாக கருத
முடியாது-ஈ.பி.டி.பி.பாராளுமன்ற
உறுப்பினர் சந்திரகுமார்.
சில ஊடகங்களில் வருகின்ற ஒரு சில தலைப்புச் செய்திகளை மட்டும் வைத்துக் கொண்டு எமது இனத்தின் கலை கலாச்சாரம் சீரழிந்து விட்டதாக கருதிவிட முடியாது என ஈ.பி.டி.பி. பாரளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்று (14) கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தின் கலாச்சார விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த முப்பது வருட கால யுத்தம் எமது இனத்தின் கலை கலாச்சார பண்பாட்டு விடயங்களில் பெரும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இருபினும் எமது கலாச்சாரம் சீரழிந்து விட்டது என்ற முடிவுக்கு வந்து விடமுடியாது. ஆனாலும் எமது கலை கலாச்சாரம் பாதகமான சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. எனவே நாம் இதிலிருந்து மீண்டு கலை கலாச்சார பண்பாட்டு விடயங்களை பேணிப் பாதுகாக்கும் பக்குவத்தை அனைவரிடத்தும் வளர்த்தெடுக்க வேண்டும். இது சமூகத்தின் கூட்டு பொறுப்பு எனவும் தெரிவித்த அவர் நவீன தொழில்நுட்பங்கள் வளர வளர கலாச்சாரத்திற்கு பாதகமான விளைவுகள் ஏற்படினும் நாம் எமது கலாச்சாரத்தை எப்படி பாதுகாக்கின்றோம் என்பதுதான் இங்கு முக்கியமான விடயம். அத்தோடு கலாச்சார சீரழிவுக்கு வெறுமனே பெண்களை மட்டும் குற்றம் சுமத்துவதனையும் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
கரைச்சி பிரதேச செயலாளர் நாகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மேலதிக அரச அதிபர் சிறினிவாசன் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் சிவலிங்கராசா கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் முருகவேல் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் சிறிதேவி பிரதேச செயலர்களான வசந்தகுமார் சத்தியசீலன் முகுந்தன் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் கலைஞர்கள் மாணவர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.